A Short Tamil Moral Story

03 2012

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் கழுதாய்?”

”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது.

நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!

Tamil Moral Story

16 2012

அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.

வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.
வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.

பறவை”உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.”என்றது.
திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,’

‘ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.”
அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,’

‘முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.”
இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,”என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?”என்று கேட்டது.’என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?’என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.
”ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?”என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை. !!!!

நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே

08 2012

பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: “நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!”

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

Tamil Moral Story ~ ஐயோ

08 2012

ஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை

06 2012

Thank you Santhiya for sending this
முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.

கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .

இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.

அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை. அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”

அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது. அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.

அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”

அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.

தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”.

அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது.

– ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை

Tamil Moral Story

06 2012

வயதான ஒரு ஏழை பிரம்மச்சாரி இருந்தான். அவனுக்கோ கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாதுதென்றான்.’ ராமபிரான்.

கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டான்‘

ஏழு அடுக்கு மாளிகையில் தங்கக் கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை எனது கண்களால் பார்க்க வேண்டும்..’ என்று ஒரே ஒரு வரம் கேட்டான்.

வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.
வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது மாளிகை.
பேரன் பிறக்க வேண்டுமானால், அவன் கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்?
வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது.

பால் குடிக்கும் கரண்டியே தங்கமானால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?
கண்களும் வந்து விட்டன.

கிழவனுக்கு ராமநாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை , இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான்.

பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்

பெண்

06 2012

Thank you Santhiya for sending this.

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.

ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.

ஒளி தோன்றுக !

இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.

கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.

மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.

பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.

தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.

பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.

நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.

உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.

எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.

இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.

தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.

தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.

விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.

மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார். தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.

மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.

அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.

ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.

பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.

‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.

கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.

மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.

அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.

அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.

மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

06 2012

Thank you Santhiya for sending this.

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

கதையின் நீதி:-

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே …!!!

A Short Moral Story in Tamil

01 2012

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.

“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”

“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.

கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…

“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”

-மீண்டும் கேட்டான்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…

“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!

A Short Story in Tamil

01 2012

ஜென் துறவி ஒருவர் எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வேளையில் புத்தியை புகட்டும் சிறுகதைகளை சொல்வதை வழக்கமாக கொண்டார். அன்றும் அதேப்போல் தனது சீடர்களை அழைத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் சீடர்களிடம், “இதுவரை நான் உங்களிடம் கதையைக் கூறி, அதற்கான சிந்தனையையும் சொல்வேன். ஆனால் இப்போது நீங்கள் நான் சொல்லும் கதையை புரிந்து கொண்டு, கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார். அதற்கு சீடர்களும் “சரி, குருவே!” என்று கூறி, அந்த கதையை மிகவும் கூர்மையாக கேட்க ஆரம்பித்தனர்.

பின் குரு கதையை சொல்ல ஆரம்பித்தார். “ஒரு ஊரில் தவளை போட்டி நடந்தது. அந்த போட்டியில் நிறைய தவளைகள் பங்கு கொண்டன. அது என்ன போட்டியென்றால், உயரமான குன்றின் உச்சிக்கு யார் முதலில் செல்வது என்பது தான். அந்த உச்சியின் உயரத்தைப் பார்த்து, அங்கு கூடியிருந்தவர்கள, எந்த தவளையும் இந்த உச்சியை அடைய முடியாது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆனால் அதில் ஒரு தவளை மட்டும் அவர்கள் பேசுவதை கூர்மையாக பார்த்தது. பின் போட்டி தொடங்கியதும், அனைத்து தவளைகளும் அடித்து பிடித்து, ஒன்றன் மேல் ஒன்றாக ஏறி, வழுக்கி விழுந்தன. ஆனால் ஒருசில தவளைகள் சற்று நிதானமாக ஓரளவு உயரத்தை அடைந்து, முடியாமல் கீழே வந்துவிட்டன. ஒரு தவளை மட்டும் உயரத்தை பொருட்படுத்தாமல் ஏறி உச்சியை அடைந்தது. அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். பின் பரிசை கொடுப்பதற்காக அந்த வெற்றி பெற்ற தவளையைப் பார்த்து, உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டால், அந்த தவளை எதுவுமே பேசாமல் இருந்தது. ஏன்?” என்று குரு கேட்டார்.

அனைத்து சீடர்களும் அவர்களுக்குள் ஒரே குழப்பத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் “தெரியவில்லையே” என்று குருவிடம் கூறினர். அதற்கு குரு “வேறு எதுவும் இல்லை, அந்த தவளைக்கு காது மற்றும் வாய் பேச வராது, அதனால் தான் அது எதுவும் பேசவில்லை” என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், “அந்த தவளை வெற்றி என்னும் நோக்கத்தை மட்டும் மனதில் வைத்து போட்டியில் பங்கு கொண்டதால் தான், அதனால் வெற்றி பெற முடிந்தது” என்பதையும் கூறி சென்று விட்டார்.

A Short Tamil Moral Story

01 2012

ஒரு நாள் ஜென் துறவி தன் நண்பரிடம் பேசிக் கொண்டே, காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் போது, ஒரு மரத்தில் தேன் கூடு இருந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து தேனை இரண்டு பேர் எடுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் துறவின் நண்பர் துறவியிடம் “தேனீ தன் கடின உழைப்பினால் தேனை சேகரித்து வருகிறது. ஆனால் அதை மனிதர்களான நாம் திருடிவிடுகிறோமே, அதற்காக அது எவ்வளவு வருத்தப்படும்” என்று கூறினார்.

அதற்கு அந்த துறவி தன் நண்பரிடம் “கண்டிப்பாக அந்த தேனீ வருந்தாது” என்று சொன்னார். “அது எப்படி வருந்தாது என்று சொல்கிறீர்கள்” என்று கேட்டார். “ஏனென்றால், மனிதர்களால் அந்த தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை எப்போதும் திருட முடியாது” என்று கூறினார்.

ஆகவே நாம் ஒருவரின் உழைப்பை வேண்டுமானால் திருட முடியுமே தவிர, ஒருவரது திறமையை திருட முடியாது என்பதை, இந்த கதை நன்கு சொல்கிறது.